எழில் நிறைந்த மொழியமைப்பினாலும், திறம் மிகுந்த மெட்டமைப்புகளாலும் இயற்றப்பட்டுள்ள திருப்புகழ், அதற்கு வேறு நிகரில்லாத உதாரணமாகத் திகழ்கிறது. மெட்டிசைத்துப் பாடக்கூடிய பாடல்களாக அவை இருப்பதால், பாடகர்கள் தங்கள் திறமைக்கேற்ப அவற்றை உன்னதமாகப் பாடி மக்களை மகிழ்விக்கவும் பக்தியில் உருக வைக்கவும் முடிகின்றது. சொல்லலங்காரத்தில் திருப்புகழை விடச் சிறந்த கவிதைகளைக் காணவே முடியாது. பதினைந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இந்தத் தெய்வீகப் பாடல்கள் இயற்றியவரைக் குறித்து நோக்கின், அவரது சரிதை நம்பமுடியாத அளவில் நம்மை வியக்க வைக்கின்றது.
ஒரு அறிஞர் கூறுகிறார்: “திருப்புகழ் இயற்றிய அருணகிரிநாதர், சங்கீதத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் பாடல்களிலேயே அவை சிறந்த இராகங்களுக்காகவே இயற்றப் பட்டவைப் போலத் தெரிகின்றது. முக்கியச் சிறந்த இராகங்களான, வராளி, லலிதா, பைரவி, பௌளி, கௌளா முதலியவை அவர் கவிதைகளில் மெட்டமைத்துப் பாடக்கூடியவை. அப்பாடல்களின் மெட்டு அமைப்புகளோ நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. . .”
திருப்புகழ்ப் பாடல்கள் இப்போது உலகெங்கும் ஒலிக்கின்றன. இந்தியாவின் தலைநகரில் தொடங்கிய திருப்புகழ் அன்பர்கள் (இதைத் தொடங்கிய திரு ஏ.எஸ்.இராகவன் அவர்கள் காஞ்சி மஹா பெரியவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; ஸ்ரீ ஜயேந்திரர் இராகவனுக்கு திருப்புகழிசைச் சக்கிரவர்த்தி என்ற பட்டம் அளித்துள்ளார்) மூலம் இணைய தளத்திலும் திருப்புகழ் பாட்டுக்கள் எல்லாமே கேட்க இயலும்)
முருவடியான் என்றறியப்படும் மதுரை (காலஞ்சென்ற) திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்கிறார்: “திருப்புகழ் என்னும் ஒப்புயர்வற்ற வண்ணப் பாக்களை முருகப் பெருமானுக்குப் பாமாலையாக்கித் தமிழுக்கு அமுதாக அளித்த முருகத் தொண்டர் அருணகிரியார். இவரைப் பற்றி அருள்மொழியரசு கிருபானந்த வாரியார் சுவாமிகள், “முருகன் ஒருவனையே பாடும் பதிவிரத நிலை உள்ளவர் என்று சிறப்பிக்கின்றார். முருகனிடம் நேரடியாக உபதேசம் பெற்ற பெருமான் இவர். தமிழ் இவரிடம் கொஞ்சியது. தமிழுடன் இவரைப் போன்று விளையாடிய வேறு புலவர் உண்டோ?”
அருணகிரியாரின் வாழ்க்கைக் குறிப்பை நோக்கின் நம்பமுடியாத மாற்றங்களை நம்மால் காண முடிகின்றது. அவர் முதலில் சென்று சீரழிந்த பாதையும், பின்னர் முருகன் அருளால் அவர் மாற்றப்பட்ட விதமும் வியப்பை அளிப்பவை. சாதாரண சிற்றின்பத்திலேயே தனது வாழ்வின் முற்பகுதியைக் கழித்த பின்னர் தீரொணாப் பிணியால் வாடியிருக்க, தன்னையே மாய்த்துக் கொள்ள வேண்டி கோபுர உச்சியிலிருந்து குதிக்க முயன்றபோது, முருகப் பெருமானே தன்னிரு கரங்களால் தாங்கிக் காப்பாற்றி, அவரது நாவில் பிரணவத்தை எழுதி, அவரது முதற் பாடலின் முதல் வார்த்தையான முத்தைத்தரு என்பதையும் எடுத்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
எது எவ்வாறாயினும், ஒரு மனிதன் தனது குறுகிய வாழ்க்கை வருடங்களில், இந்தியா இலங்கை இரு நாடுகளையும் முழுவதுமாகச் சுற்றி எல்லா முருகத் தலங்களையும் கண்டு அவைகள் எல்லாவற்றிற்கும் உள்ள சிறப்புகளைக் கண்டு அவற்றை மையமாகக் கொண்டு, முருகனின் மீது ஆயிரக் கணக்கான கவிதைகள் இயற்றியுள்ளார் என்பதை நினைக்கையிலேயே மெய் சிலிர்க்க வைக்கும். அப்பெரும் நூலான திருப்புகழ் கையெழுத்துப் பிரதிகளாகவே சில நூற்றாண்டுகள் இருந்துள்ளன. ஆகையால் எவருக்கும் அக்கவிதைகளைப் பற்றி அக்காலக் கட்டத்தில் தெரிந்திருக்கவில்லை. அப்படியிருந்தபோது அதன் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்ந்ததும் முருகனருள்தான் எனக் கூறவேண்டும். அப்படித் திருப்புகழை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு, நாம் திரு வி. டி. சுப்பிரமணிய பிள்ளை என்பவருக்கும் அன்னாரது குமாரர்கள் வி. எஸ். ஷண்முகம் மற்றும், செங்கல்வராய பிள்ளைக்கும் நன்றி சொல்ல வேண்டும் .பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருப்புகழ் பதினாறு, பதினேழு நூற்றாண்டுகளில், சில குடும்பங்களைத் தவிர மற்ற எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. திரு வி டி சுப்பிரமணிய பிள்ளை 1871 ஆம் ஆண்டில் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் சிதம்பரத்துக் கோவில் தீட்சிதர்கள் ஏதோ ஒரு வழக்கின் போது அவர்களது வாதத்திற்கு நிரூபணமாக சில தமிழ்க் கவிதைகளை மேற்கோள்களாகக் காட்டினர். அவற்றில் ஒன்று திருப்புகழிலிருந்து எடுக்கப்பட்டது. அப்பாட்டை அவர்கள் எடுத்துச் சொல்கையில் சுப்பிரமணிய பிள்ளை மனமுருகிப் போனார். அப்பாட்டைப் பற்றிய விவரம் அறிந்து கொள்ள முயன்றார் அப்பாட்டு இவ்வாறிருந்தது
“தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே
வேத நூல் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிரம்
மேன்மை வேதியர் மிகவே பூசனை புரி கோவே
வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள் கோபுர
மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே”
அப்பாட்டில் லயித்துவிட்ட பிள்ளையவர்கள் அவர்களிடமிருந்து அது திருப்புகழ் பாடலென அறிந்து கொண்டு மற்றவற்றைத் தேடலானார். அருணகிரியார் மொத்தமாக 16,000 பாடல்கள் பாடியதாகத் தெரிகின்றது. ஆனால் இப்போது இருப்பவை 1334 பாட்டுகளேயாகும். திருப்புகழைத்தவிர அவர் இயற்றிய அவரது கந்தரலங்காரம், கந்தர் அனுபூதி மற்றும் விருத்தங்களும் பக்தர்களால் பாடப் படுபவை.
தேட ஆரம்பித்தபோது சுப்பிரமணிய பிள்ளைக்கு ஜனவரி 1876 ல் முதலில் கிடைத்தவை ஆறு பாட்டுகளேயாகும். இவை ஆறுமுக நாவலர் இயற்றிய சைவ வினா விடை என்ற நூலில் கோர்க்கப் பட்டவை. இதற்கிடையில் அவர் ஓலைச் சுவடிகளாகக் கிடைத்த சில பாடல்களை எழுத்தில் தாள்களில் தாமே வடித்தார். 1878 ஜூன் 28 அன்று (ஆனந்தரங்கம் பிள்ளை போன்று இவரும் ஒரு நாட்குறிப்பு வைத்திருந்திருக்கின்றார். ஆகையால் நாம் பல விஷயங்களை அந்நாட்குறிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது) காஞ்சீபுரத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அண்ணாமலைப்பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்களைப் பெற்றார்! .தேடுவதையும் சேகரிப்பதையும் சேகரித்தவற்றைத் தொகுப்பதுமாய் அவர் வாழ்க்கை ஓய்வின்றி ஓடிற்று. இதுவும் தெய்வ சங்கல்பத்தினாலன்றோ
அதே வருடம் செப்டம்பர் 30 அன்று இன்னும் 400 பாடல்களை அவர் சிதம்பரம் அருகிலுள்ள பெண்ணாத்தூரிலிருந்த அண்ணாமலைப் பிள்ளை என்பவரிடமிருந்து பெற்றார். விடாத அவர் முயற்சியின் விளைவாகவும் முருகனருளாலும் அவருக்கு 1903 ஆம் ஆண்டில் ஓலைச் சுவடிகளாகத் தொடர்ந்து கருங்குழி ஆறுமுக அய்யர் என்பவர்900 பாடல்களை அளித்தார். அவற்றில் மொத்தமாக 780 பாடல்கள் இருந்தன. ஆனாலும் தொகுப்பதில் அவருக்கு நிறையவே சிரமம் இருந்தது. ஏனெனில் பல பாடல்கள் முன்னரே கிடைத்தவை. அந்தப் பெரும் பணியை அவர் தொடர்கையில் அவருக்குத் துணையாக நின்றவர்கள் மூன்று தமிழ் அறிஞர்கள். கடலூர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப் பிள்ளை மற்றும் அனந்தராம அய்யர் என்பவர்கள்.
அவர் அவற்றைத தொகுக்கையில், முதலில் ஆறு படை வீடுகளான, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திரு ஆவினன்குடி, திருவேரகம், குன்றுதோராடல், பழமுதிர்சோலை முதலானவை பற்றிய பாடல்களைத் தொடக்கத்தில் வைத்தார். மற்ற பாடல்களை, தொண்டைமண்டலம், சோழ நாடு, போன்று பிரித்தமைத்தார். மற்ற தலங்களின் மீது அமைந்துள்ள பாடல்களைப் பின்னர் வருமாறு அமைத்தார்.
1895 ஆம் ஆண்டில் முதல் தொகுப்பு 603 பாடல்களுடன் வெளியிடப்பட்டது. அந்த முதற்பதிப்பில் “தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டினால் அவற்றை மறு பதிப்பில் திருத்தி வெளியிடுவதாக” அவர் குறிப்பிட்டதிலிருந்து அவருடைய நேர்மையும் பணிவும் நமக்குத் தெரிகின்றன.
இரண்டாவது தொகுப்பு, சுமார் பதினைந்து வருடங்களுக்குப், பின்னர் தான் 1909 ல் பலமுறை சரிபார்த்த பின் வெளி வந்தது. 1921 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் மூன்றாவது தொகுப்பு சுப்பிரமணிய பிள்ளையின் குமாரர்களால் (வி எஸ் ஷண்முகம், வி எஸ் செங்கல்வராயன்) சில புது பாடல்களுடன் வெளி வந்தது. ஜூன் 1931 ஆம் ஆண்டில் நாலாவது தொகுப்பு வெளி வந்தபோது அதில் திருப்புகழ் சிறப்புப் பாயிரமும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பின்னர் திருப்புகழ் உலகெல்லாம் அறியச் செய்ய வைத்தவர்களை நாம் நினைவு கூறவேண்டும்.
அவற்றில் முதலில் குறிப்பிடவேண்டியவர் வள்ளிமலைச் சச்சிதானந்த சுவாமிகள் 1870-1951 ஆம் ஆண்டுகளில் இப்பெரியவர் அவற்றைச் செல்லுமிடங்களிலெல்லாம் பாடி பக்தர்களை ஈர்த்தார். இவர் வி எஸ் சுப்பிரமணிய பிள்ளையை முதலில் 1912ல் திருத்தணியில் சந்தித்தார். 1918 ஆம் ஆண்டு முதல், பாத அடி கால் நசைப் பயணத்தின் போது தொடங்கினார். அப்படித்தான் பிரதி வருடமும் ஜனவரி முதல் தேதியன்று நடத்தப்படும் படிவிழா தொடங்கிற்று.
பின்னாட்களில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களால் திருப்புகழ் இன்னும் மெருகேற்றப்பட்டது.
★★★
Arunagirinathar strongly condemns external pomp and splendor in religious ceremonies. He was also completely against human and animal sacrifices which was prevalent in his days. According to him all practices devoid of devotion are meaningless and hypocritical. such practices cannot invoke the Lord's grace, for it is sincerity and not gandeur, which is essential. The lord lives in the heart of pure and Spotless souls. Hence vain are the ceremonials and austerities performed without bhakti.
He also emphasis on the company of virtuous men. We should tender selfless service to these men. wretched men under the influence of lust and wealth deserve to be treated with Indifference. Man Should also control is mind and not allow it to wander. A distraught mind results in sorrow. We should bring it to contemplate on the Lord's feet. We should control our senses, develop the attitude of infinite compassion and humility. Anger should Should be banished for it is self destructive. pride should be given up. one should not even Pride over ones spirituality. Everything is due to the grace of god. We have nothing to be proud of. In the Thirupugazh "ennal pirakknavum" he says, "I am no one to be born nor to die. I cannot pray, I cannot worship, I cannot enjoy not suffer. I cannot act nor think . It is a lord who has given powers of action.
R.Mythili, MA., “Saint Arunagirinadhar 600th Birthday Celebration Souvenir”

