அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதி அன்றே உரைத்த அருளாளரின் அவதாரத் திருநாள் என்நாளென்று ஆன்றோர்களால் கணிக்கப்படவில்லை. அவருக்கு முன் ஆறுாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரைத் தோன்றிய நாயன்மார்களின் மற்றும் ஆழ்வார் பெருமக்களின் ஜனனம் உறுதியாக அறியப்பட்ட போதிலும் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளரின் ஜனனம் பற்றிய குறிப்புகள் இல்லாதது அவரது பக்த கோடிகளுக்கு வருத்துமளித்து வந்தது.

அருளாளருக்கு காலம்தொட்டு குருபூஜை செய்யப்படாமல் இருந்ததை அறிந்த ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அவர்கள் உத்தராயணத்து மூல நட்சத்திரம் கூடிய ஆறாவது பௌர்ணமி தினத்தை குரு பூஜையாக கொண்டாட சீடர்களுக்கு அறிவித்தார்.

நட்சத்திரங்களில் மூலத்திற்கு தனி சிறப்புண்டு. மூல நட்சத்திர நன்னாளில் பல ஜீவன் முக்தர்கள் தோன்றியுள்ளார்கள். அருணகிரியாரால் திருமுருகனின் அவதாரமாக போற்றப்பட்ட திருஞானசம்பந்தர் வைகாசி மூல நட்சத்திரத்தில் தான் அவதறித்தார். வாயு புத்திரர் அனுமனும் மூல நட்சத்திரத்தில் ஜனித்தவர்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் குங்கிலியகலயனார், திருநீலகண்ட யாழ்பாணர், திருநீலநக்க நாயனார், முருக நாயனார் மற்றும் மூர்க்க நாயனார் போன்றோர் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர்கள். வைணவ அடியார்களில் மணவாளமாமுனி மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்.

மூல நட்சத்திரத்திற்கு இத்தகைய சிறப்பு இருந்தாலும் ஆனி மூலத்திற்கு தனிச் சிறப்புண்டு. 'ஆனி மூலம் அரசாளும் ‘என்பார்கள். எவ்வளவு பெரிய உண்மை! ஆனி மூலத்தில் அவதரித்த அருணகிரிப் பெருமான் அகில உலகத்தையே அன்று மட்டும் அல்ல இன்றும் ஆண்டுகொண்டுருக்கிறார் என்று சொல்வது மிகையன்று.

பாம்பன் சுவாமிகள் கூறிய வாறே அவரது சீடர்கள் ஆனி மூலத்தன்று குருபூஜையை செய்து வந்தனர். ஆனால் அருளாளர் அவர்கள் ஆனி மூலத்தன்று பிறந்தார் என்ற பாம்பன் சுவாமிகள் கணித்ததை ஊரறியச் செய்தவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் தந்தை திரு மல்லையதாச பாகவதர் தான்.

அவர்கள் 1932 ஆம் ஆண்டு காங்கேயநல்லூரில் திருப்புகழ் சபையை உருவாக்கி அதன் தலைவராகப் பணியாற்றி அருணகிரிநாதப் பெருமானின் அவதாரப் பெரு விழாவை தொடர்ந்து நடத்தி வந்தார்கள். அவருக்கு பிறகு அந்த அரும்பணியை வாரியார் சுவாமிகள் தொடர்ந்து செய்து வந்தார்கள்.

முக்தி நகரில் முத்தம்மையின் மைந்தனாக அவதரித்து முத்தமிழுக்கு மங்காப் புகழ் சேர்த்த மகானுக்கு மணிமண்டபம் இல்லயே என்ற வருத்தம் திருப்புகழ் பக்தர்களிடம் பல காலமாக மேலோங்கி நின்றது.

2019 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் அருணைத் திருப்புகழ் சபை என்ற அமைப்பு துவங்கப்பட்டு மாதாமாதம் பேராசிரியர் இராமு அவர்களைக் கொண்டு திருப்புகழ் வகுப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டது. சபையின் துவக்க விழாவின்போது அருணை மாநகரில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை முதன் முதலில் வித்திட்டவர் திரு ஆகாஷ். முத்துகிருஷ்ணன் அவர்கள் தான். அவர்களின் தூண்டுகோலின் பேரில் சேஷாத்திரி ஆசிரமத்தின் தலைவராக இருந்த திரு முத்துக்குமாரசாமி ஐயா அவர்கள் தலைமையில் மணிமண்டபம் கட்டும் பணிக்காக அறக்கட்டளை ஒன்று 2019-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அருளாளரின் மணிமண்டபம் கட்டும் பணிக்காக இடம் வழங்கக் கோரி இந்து சமய அறநிலையத் துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. மாநில அரசும் மணிமண்டபம் கட்டுவதற்காக இடம் அளிப்பதாக உறுதியளிது சட்ட மன்றத்தில் மானியக் கோரிக்கையின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக அற நிலையத் துறையின் மானியக் கோரிக்கை 20-7-19 அன்று இடம் பெறுவதாக இருந்தது. அப்பொழுது அருளாளர் அவர்கள் ஒரு சித்தாடல் புரிந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாட்டில் வேலூர் தொகுதியைத் தவிர்த்து மற்ற தொகுதிகள் எல்லாம் தேர்தல் நடைபெற்றது. வேலூர் தொகுதியின் தேர்தல் சில காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அச்சமயம் திடிரென்று ஜுலை 4 ஆம் தேதி தேர்தல் ஆணையம் வேலூர் பாராளமன்ற இடைத்தேர்தலை அறிவித்தது. அதனால் சட்ட மன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், நாட்கள் குறைக்கப்பட்டு இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கை ஜீலை 15 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

ஜூலை 15 ஆம் தேதி அன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் 'திருப்புகழ் அருளிய அருணகிரிநாதருக்கு திருவண்ணாமலையில் மணிமண்டபம் கட்டப்படும்' என்று பலத்த கரகோஷத்தின் மத்தியில் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

சரி ஜூலை 15 ஆம் தேதி அறிவித்ததில் என்ன சிறப்பு? ஜூலை 15 ஆம் தேதி தான் ஆனி மூல நன்னாள். அன்று தான் அருளாளர் அவர்கள் அவதரித்தத் திருநாள். அருளாளர் சித்தாடல் புரிந்து தனது அவதார திருநாளன்றே அறிவிப்பை வெளியிட வைத்தார் என்று சொன்னால் மிகையாகாது.

மணிமண்டபம் கட்டுவதற்கானப் பணிக்கு அருளாளர் அவர்கள் தனது பரிபூரண அருளையும் ஆசியும் வழங்கியுள்ளார் என்பதை இந்த அதிசய நிகழ்வின் மூலம் நாங்கள் உணர்ந்தோம்.

தமிழக அரசாங்கம் மலை சுற்றும் பாதையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 1.92 ஏக்கர் இடத்தை மணிமண்டபம் கட்டுவதற்காக ஒதுக்கியது. இதனை அருள்மிகு அண்ணாமலையார் அளித்த கொடையாகவே கருதினோம். அன்று 'வெண் தழல் மாபொடி' அருணகிரியாருக்கு வழங்கிய அண்ணாமலையார், இன்று அவரது மணிமண்டபத்திற்கு மாமலை அருகாமையிலே மனையை வழங்கி அடியார்களின் மனம் குளிரச் செய்வித்துள்ளார்.

மூல நட்சத்திரத்தன்று தமிழக அரசு செய்தி வெளியிட்டதை தொடர்ந்து மணிமண்டபத்தின் அனைத்து நிகழ்வுகளையும் மூல நட்சத்திர நன்னாளில் துவக்க தீர்மானித்தோம். 8-9-2019 அன்று அதாவது ஆவணி மூல நட்சத்திர நாளன்று சேஷாத்திரி ஆசிரமத் தலைவர் திரு முத்துக்குமார சாமி ஐயா அவர்கள் தலைமையிலும் திரு சின்ராஜ், மற்றும் திரு தனுசு அவர்கள் முன்னணியிலும் கால்கோள் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. விழாவில் அனைத்து கட்சி அரசியல் முக்கிய பிரமுகர்களும் கட்சி பேதமின்றி கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.

பிறகு கருவறை கட்டும் பணி, இணையதளம் துவக்கும் நிகழ்வு, அருளாளரின் திருவுருவம் செதுக்கும் பணி, மகா மண்டபம் மேற்கூரை அமைக்கும் பணி, திருவுருவத்தை குமரக்கோவிலில் ஜல வாசம் வைக்கும் நிகழ்வு என அனைத்தும் மூல நட்சத்திர நன்னாளில் நடந்தேறின.

சிறிது காலம் ஆலய திருப்பணி கொரோனா பெருந்தோற்று பரவியிருந்த காலத்தில் சற்று தோய்வுற்றது. கோயில் திருப்பணி மீண்டும் செம்மையாக நடந்தேறிட 2022 ஆம் ஆண்டு ஆனி மூல நட்சத்திரத்தன்று கோவை தொழிலதிபர் திரு. டி .டி .கே. முருகன் ஏற்பாட்டில் மணிமண்டபத்தில் சத்ரு சமார வேள்வி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதன் பிறகு ஆலயப் பணிகள் தங்கு தடை இன்றி வேகமாக நடக்க ஆரம்பித்தது. பெரும் பகுதி ஆலய வேலைகள் நடந்தேறிய நிலையில் கும்பாபிஷேக தேதியைத் தீர்மானிக்க அறக்கட்டளை கூட்டம் ஜூன் மாதம் 17-ஆம் தேதி கூட்டப்பட்டது. அப்பொழுது பல்வேறு சிவாச்சாரியார்களும், பல்வேறு ஸ்தபதிகளும் கூறிய தேதிகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் கடைசியாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது ஐப்பசி மூல மங்கள நாளாகும்.

மூல நட்சத்திரத்தில் துவங்கிய இந்த திருப்பணி மூல நட்சத்திர நன்னாளிலே நிறைவடைவது மட்டற்ற மகிழ்ச்சியும், பேரானந்தத்தையும் திருப்பணியில் கலந்து கொண்டவர்களுக்கு அளித்தது என்று உறுதியோடு கூறலாம்.

'நினைப்பதும் நிகழ்வதும் அவன் செயலாலே' என்பது வேலவனை புகழ்ந்து கவிஞர் வாலி எழுதிய வைர வரிகளாகும். அதன்படி இந்த மணிமண்டபத்தை கட்ட வேண்டும் என்று திரு முத்துகிருஷ்ணன் நினைத்ததும் முருகன் செயல்தான், அதேபோல் இந்த மணிமண்டபம் பணி துவங்கி நல்ல முறையில் முடிந்ததும் அவனுடைய திருவருளால் தான் என்று உறுதியோடு கூறலாம்.

வாழ்க அருணகிரிநாதர்! ஓங்குக அவர் புகழ்

★★★

கடந்த காலம் என்று ஒன்று இருக்கிறது, நிகழ்காலம் என்று ஒன்று இருக்கிறது, வருங்காலம் என்று ஒன்று இருக்கிறது. இந்த மூன்று காலத்திற்கும் துணை தேடி வைத்துக் கொள் என்று அருணகிரிநாதர் நமக்கு ஆலோசனை சொல்கிறார்.

முதலில் சொல்கிறார் விழிக்குத் துணை திரு மென்மலர் பாதங்கள். மனிதனின் ஐம்புலன்களும் ஆசை ஊட்டும் கருவிகள். ஆனால் கண் ஊட்டுவது போல் மற்ற கருவிகள் ஊட்டுவதில்லை. கண்களால் பார்த்து பார்த்து மனிதன் ஆசை என்ற நோயோடு இருக்கின்றான் இந்த கண் நோயை தீர்க்கக் கூடிய மருந்து முருகனின் மலர் போன்ற இரு பாதங்கள். அடுத்ததாக மொழிக்குத் துணை வேண்டும். 'மெய்மைகுன்றரமொழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள்' என்று சொல்கிறார். நாம் தேவையில்லாததைப் பேசி பேசி வாழ்க்கையை வீணாக்கி கொண்டிருக்கின்றோம். வாக்கு என்ற ஒன்று இருக்கிறதே அதுதான் நம் உடம்போடு உயிரை ஒட்டுகின்ற கருவி. (அதற்கு வாக்கு என்று பெயர்).அந்த வாக்கு நம் உடம்புக்குள்ளேயே இறைவன் மூலாதாரத்தில் பதித்து அது புறப்பட்டு வெளியே வருகின்றது. வாக்கு என்பது சிவனுடைய அம்சம் கொண்டது .ஆகவே இந்த வாக்கை வீணாகக் கழிக்காதே . இயன்றவரை உனது நாக்கிலே இருந்து வருகின்ற வார்த்தைகள் இறை சம்மந்தமான வார்த்தைகளாக இருக்க வேண்டும். ஆகவே தினமும் அந்த இறைவனின் பெயரைச் சொல் என்கிறார் அருணகிரிநாதர். விழிக்கும் மொழிக்கும் துணை முதல் இரண்டு வரிகளில் சொல்லிவிட்டார் இவை இரண்டும் நிகழ் காலத் துணைகள்.

அடுத்தது முன்பு செய்த பழிக்குத் துணை என்று பாடி இறந்த காலத்திற்கு துணை தேடுகிறார் . நாம் பல பிறவிகள் எடுத்து வினை சேர்த்து வைத்திருக்கின்றோம். அதற்கு சஞ்சித வினை என்று பெயர். முருகா பன்னிரு தோளோடு வந்து என்னுடைய வினைகளை கலைந்து விடு என்று வேண்டுகிறார். நிகழ்காலத் துணை மற்றும் இறந்த காலத் துணை முடிந்தது. இனி வருங்காலத்திற்கு துணை சொல்கிறார். வருங்காலத்திலே எல்லோருக்கும் வரக்கூடிய பிரச்சனை மரணம். மரணத்திலே இருக்கக்கூடிய சிக்கல் என்னவென்றால் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கப் போகின்றது என்பது நமக்கு தெரியாது, என்றைக்கு மரணம் வரும் என்று தெரியாது, மரணத்திற்குப் பிறகு நாம் போகக்கூடிய பாதை எப்படி இருக்கும் என்று தெரியாது, மரணப் பாதைக்கு யாரும் துணை வரமாட்டார்கள். (அந்த மரணம் என்ற பயந்த தனி வழிக்கு எது துணையாக வர முடியும்.) போகப் போக வழி எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது.

அந்த வழி இருளான வழியாக இருக்கலாம் அல்லது கடும் வெயில் தருகின்ற வழியாக இருக்கலாம். வெயிலாக வழி இருந்தால் நிழல் தேவை. இருளாக இருந்தால் ஒளி தேவை. அதனால் என்ன பாடினார் பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலுவும் செங்கோடன் மயூரமுமே. வழி இருட்டாக இருந்தால் அந்த வேல் ஒளி காட்டி முன்னே அழைத்துச் செல்ல வேண்டும். அல்லது வெயிலாக இருந்தால் மயில் தோகை விரித்து நிழல் தர வேண்டும். ஆகவே இந்த மூன்று காலத்திற்கும் துணை வேண்டும் என்று கேட்டு நின்றவர் அருணகிரிநாதர் பெருமான்.

— இலங்கை ஜெயராஜ்